அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்


அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 12:00 AM IST (Updated: 17 March 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

நாகை அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நாகப்பட்டினம்:-

நாகை அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

அமரநந்தீஸ்வரர் கோவில்

நாகையில் அபீதகுஜாம்பாள் உடனாகிய அமரநந்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு மிக்க இக்கோவிலில் இந்திர பகவான் வழிபாடு மேற்கொண்டு சாப விமோசனம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி, இந்த ஆண்டின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நிகழ்ச்சியாக தினமும் வெவ்வேறு வாகனங்களில் அமரநந்தீஸ்வரர், அபீதகுஜாம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்று வந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்ட பின்னர், காலை 8 மணி அளவில் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் சுவாமிகள் தேர்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, மங்கள வாத்தியத்துடன், பக்தி கோஷம் முழங்க தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. பிரதான தேருக்கு முன்பாக விநாயகர், சுப்பிரமணியர் தேர்களும், பின்னால் அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேர்களும் வலம் வந்தன. விழாவில் நாகை, திருவாரூர், காரைக்கால் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

Next Story