புதிய ரேஷன் கடை கட்டக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ரேஷன் கடை கட்டக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் நல்லியாம்பாளையம் புதூரில் உள்ள ரேஷன் கடை தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இதே பகுதியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடத்தை பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் புதிய ரேஷன் கடை கட்டப்பட உள்ள இடத்திற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் தாசில்தார் அனுமதி வழங்கிய இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரியும் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற தாசில்தார் கண்ணன் பொதுமக்களிடம் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது சம்பந்தமாக தமிழக முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் திருச்செங்கோடு உதவி கலெக்டர் ஆகியோருக்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அனுப்பி உள்ளனர்.
Related Tags :
Next Story