தனியார் வங்கி மேலாளர் பணி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.2½ லட்சம் மோசடி தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
தனியார் வங்கியில் மேலாளர் பணி வழங்குவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பறித்து மோசடி செய்த மர்ம நபர் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:-
என்ஜினீயர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). என்ஜினீயரான இவர் பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளை எழுத தயார் செய்து வந்தார். இதேபோல் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு இணையதளம் மூலம் தனது பயோடேட்டாவை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிய கண்ணன் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து கண்ணனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தனியார் வங்கியின் மனிதவள மேம்பாட்டு பிரிவு மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
மோசடி
தனியார் வங்கி மேலாளர் பணியில் சேர பதிவு கட்டணம், பயிற்சி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும், கண்ணனுக்கு பணி நியமன ஆணையை இணையதளம் மூலம் அனுப்பி உள்ளதாவும் செல்போனில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்டார்.
இதை நம்பி கண்ணன் தனது வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 450 தொகையை அனுப்பி உள்ளார். அதன்பின் செல்போனில் பேசிய நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தனியார் வங்கியில் வேலை தருவதாக கூறி அந்த மர்ம நபர் போலியான பணி நியமன ஆணையை வழங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது அப்போது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் இதுபற்றி தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் ராகவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story