காட்டுவன்னஞ்சூர் பாலமுருகன் கோவிலில் தீமிதி திருவிழா


காட்டுவன்னஞ்சூர் பாலமுருகன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 17 March 2022 10:14 PM IST (Updated: 17 March 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

காட்டுவன்னஞ்சூர் பாலமுருகன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாககுண்டத்தில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினா். 

மேலும் பக்தர்கள் அலகு குத்தியும், சிறிய தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story