மூத்த மகள் விஷம் குடித்து இறந்ததால் சோகம்: குழந்தையை கொன்று தாய் தற்கொலை தேன்கனிக்கோட்டை அருகே விபரீத முடிவு


மூத்த மகள் விஷம் குடித்து இறந்ததால் சோகம்: குழந்தையை கொன்று தாய் தற்கொலை தேன்கனிக்கோட்டை அருகே விபரீத முடிவு
x
தினத்தந்தி 17 March 2022 10:38 PM IST (Updated: 17 March 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

மூத்த மகள் விஷம் குடித்து இறந்ததால் இளைய மகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை:
மூத்த மகள் விஷம் குடித்து இறந்ததால் இளைய மகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூத்த மகள் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அரசகுப்பம் கொரட்டகிரி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 42). விவசாயி. இவருடைய மனைவி கங்கம்மா (36). இவர்களுக்கு ராணி (17), மோனிஷா (7) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். ராணி அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அவர், படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் தன்னுடைய மகளை கங்கம்மா கண்டித்துள்ளார். இதில் மனம் உடைந்த ராணி கடந்த 13-ந் தேதி எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மூத்த மகள் இறந்ததால், தன்னால்தான் மகள் இறந்து விட்டாள் என கங்கம்மா வேதனையில் இருந்ததாக தெரிகிறது.
எலி மருந்து
எனவே தானும் சாக வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். அதுவும் இளைய மகளை விட்டு செல்ல மனம் இல்லாமல் அவளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் (புதன்கிழமை) தின்பண்டத்தில் எலி மருந்தை வைத்து தன்னுடைய குழந்தைக்கு கொடுத்தார். தாய் தருவது விஷம் என்பது தெரியாமல் அந்த குழந்தை அதை வாங்கி தின்றது. பின்பு கங்கம்மாவும் எலி மருந்தை தின்றுள்ளார். சிறிது நேரத்தில் தாய்- மகள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
தாய் - மகள் தற்கொலை 
இதனை பார்த்த ரவி, மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். கங்கம்மாவுக்கு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியிலும், மோனிஷாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். மனைவி, மகளின் உடலை பார்த்து ரவி கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மூத்த மகள் இறந்த சோகத்தில் இளைய மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story