சுப்பிரமணியசாமி கோவில் தேரோட்டம்
சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் ஒன்றியம் சூளாங்குறிச்சி கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் முருகர் எழுந்தருளினார். தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story