கோவில் பூட்டை உடைத்து நகை உண்டியல் பணம் கொள்ளை


கோவில் பூட்டை உடைத்து நகை உண்டியல் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 17 March 2022 10:56 PM IST (Updated: 17 March 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தில் சீதாராமர், வராஹி அம்மன், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் ரங்கநாதன் (வயது 75) என்பவர் உரிமையாளராக உள்ளார். பூசாரியாக மாம்பழப்பட்டை சேர்ந்த சீனிவாசன் (45) என்பவர் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக சீனிவாசன் வந்தார்.
அப்போது கோவிலின் முன்பக்க இரும்புக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே கோவிலுக்குள் சென்று பார்த்தபோது சீதாதேவி, காயத்திரி, வராஹியம்மன் ஆகிய சாமி சிலைகளின் கழுத்தில் இருந்த 8 கிராம் குண்டு தாலியும் மற்றும் கோவில் பிரகாரத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணமும் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த தகவலின்பேரில் காணை போலீசார், அந்த கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.40 ஆயிரமாகும். உண்டியலில் சுமார் ரூ.5 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவிலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story