பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.ஜி.பி. அறிவுறுத்தல்


பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.ஜி.பி. அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 March 2022 11:05 PM IST (Updated: 17 March 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களின் மீது போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் சரக காவல்துறையின் ஆய்வுக்கூட்டத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

வேலூர்

பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களின் மீது போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் சரக காவல்துறையின் ஆய்வுக்கூட்டத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட காவல்துறையின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ்கண்ணன் (வேலூர்), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), பவன்குமார்ரெட்டி (திருவண்ணாமலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு வேலூர் சரககத்தில் சட்டம் ஒழுங்கு, குற்ற செயல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பது குறித்து மாவட்டம் வாரியாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 
பின்னர் அவர் பேசியதாவது:-

புகார் மனுக்களின் மீது...

வேலூர் சரக காவல்துறையில் குற்ற சம்பவங்களை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பேணி காத்திட ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்கவும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதள குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சைபர்பிரிவு போலீசாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். போலீசாருக்கு வாரந்தோறும் சுழற்சிமுறையில் ஒருநாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும். 

இவ்வாறு டி.ஜி.பி. கூறினார்.

போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் போதைபொருள் கடத்தல் தடுப்பு, சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 11 குழுக்களை சேர்ந்த போலீசாருக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இதில், 4 மாவட்டங்களை சேர்ந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை பூங்கொத்து கொடுத்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ஆய்வு செய்து, அங்கு பயிற்சி பெறும் போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

Next Story