நுகர்வோர் பாதுகாப்பு தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


நுகர்வோர் பாதுகாப்பு தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 17 March 2022 11:50 PM IST (Updated: 17 March 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட அளவிலான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி முன்னிலை வகித்தார். விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 கல்லூரி மற்றும் மூன்று பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசினர். மேலும், புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி மற்றும் கீரனூர் ஆகிய நான்கு பகுதிகளில் இயங்கி வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை, தொழிலாளர் நலத் துறை, கூட்டுறவுத்துறை, மருந்து கட்டுப்பாடுத் துறை ஆகிய துறைகளை சார்ந்த துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 18 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் முதல் 3 பரிசுகளுக்கான கேடயங்களை வழங்கினார். பள்ளி மற்றும் கல்லூரிகளின் சார்பில் கவிதை, பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்ட 90 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு குறித்த கையேட்டினை மாவட்ட கலெக்டர் வெளியிட தன்னார்வ நுகர்வோர் அமைப்பை சேர்ந்த பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர். முன்னதாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கணேசன் வரவேற்றார். முடிவில் அறந்தாங்கி தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) கருப்பையா நன்றி கூறினார்.

Next Story