திருமேனிநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம்
திருமேனிநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடந்தது.
காரியாபட்டி,
திருச்சுழியில் திருமேனிநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருமேனிநாதர் கோவில்
திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும், 14 பாண்டிய தலங்களில் 12-வது தலமாக விளங்கும் துணைமாலையம்மன் சமேத திருமேனிநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து துணை மாலையம்மனுக்கும், திருமேனிநாதருக்கும் தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, விசேஷ அலங்காரத்துடன் காலையும், மாலையும் ரிஷப வாகனம், அன்னவாகனம், கிளிவாகனம், சிம்ம வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் அம்பாள் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது தேரடி கருப்பணசாமி அருகில் இருந்து கிளம்பி நகரின் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து இறுதியில் கோவிலை வந்தடைந்தது.
மேலும் இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story