காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சியில் சாத்தங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின் உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தொடர்ந்து 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருவதாகவும் கூறி சாத்தங்குடி கிராம மக்கள் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தேவேந்திர குல மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் அருள்செல்வம் தலைமை தாங்கினார். சாத்தங்குடி கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story