பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் கோலாகலம்
திருப்புவனம், உருவாட்டி, சிவகங்கை கோவில்களில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
திருப்புவனம்,
திருப்புவனம், உருவாட்டி, சிவகங்கை கோவில்களில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
திருப்புவனம்
திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர் சவுந்திரநாயகி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை-மாலை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் புஷ்பவனேசுவரரும், மற்றொரு தேரில் சவுந்திரநாயகி அம்மனும் தனித்தனியாக எழுந்தருளினார்கள். பின்பு காலை 9.50 மணிக்கு தேரோட்டம் ஆரம்பமானது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு இரண்டு தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர்கள் திருப்புவனம் கீழ ரதவீதி, மதுரை-மண்டபம் தேசியநெடுஞ்சாலை, சந்தை திடல், மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, வழியாக மதியம் 12 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருப்புவனம் கோவில் சூப்பிரண்டு சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
உருவாட்டி
காளையார்கோவில் அருகே உருவாட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பால்குடம், பறவை காவடி, மயில் காவடி, தொட்டில் கட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
இதை தொடர்ந்து நேற்று அதிகாலை 6 மணியளவில் அம்மன் ேதரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்ேதரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை விசுவநாத சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினசரி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 9-ம் திருநாளான நேற்று மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. நகரசபை தலைவர் துரைஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த இரவு 7 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் தேரில் இருந்த வாழைபழங்களை பக்தர்கள் மத்தியில் வீசினார்கள்.
இதையொட்டி சிவகங்கை துணை சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில் மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story