பல்வேறு மாநில கலைஞர்களின் நாட்டுப்புற கலைவிழா
தஞ்சையில் 2 இடங்களில் நாட்டுப்புற கலை விழா நேற்று நடைபெற்றது. இதில் 18 குழுவினர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் 2 இடங்களில் நாட்டுப்புற கலை விழா நேற்று நடைபெற்றது. இதில் 18 குழுவினர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நாட்டுப்புற கலை விழா
இந்திய அரசின் கலாசார துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் ஆக்டேவ் 2022 என்கிற வடகிழக்கு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, தென்னக பண்பாட்டு மையத்தில் தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடனங்களின் கலை விழா, கைவினைப் பொருட்காட்சி, உணவுத் திருவிழா ஆகியவை நேற்று முன்தினம் தொடங்கி வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. நேற்று 2-வது நாள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
18 குழுவினர் பங்கேற்பு
நேற்று தென்னக பண்பாட்டு மைய திறந்தவெளி அரங்கம் மற்றும் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சுதர்சனசபா திடல் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகம், ஜம்மு- காஷ்மீர், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், கேரளம், ஆந்திரம், பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் 30 குழுக்களை சேர்ந்த 450 கலைஞர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி நடத்தினர்.
தென்னக பண்பாட்டு மையத்தில் 10 குழுவினரின் கலை நிகழ்ச்சியும், சுதர்சன சபா திடலில் 8 குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோரா, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம், இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம், திருச்சி பெல் நிறுவனம் ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது. மேலும் தென்னக பண்பாட்டு மையத்தில் கைவினைப்பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story