கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அழகாபுரம் கிளை செயலாளர் வீராசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு மணிவேல், மகாராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து பேசினர். குழந்தைகளை புதைக்கும் மயான ஆக்கிரமிப்பை அகற்றிடவும், அனைத்து தரப்பினருக்கும் 100 நாள் வேலை வழங்கிடவும், கூட்டுறவு வங்கியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கடன் வழங்க வேண்டும், ஆதிதிராவிடர் காலனி தெருவில் சாலையில் இருபுறமும் நீர் வரத்து வாய்க்கால் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கிராமிய பாடல் பாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாவிட்டால், மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கட்சியினர் பேசினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் (கிராம ஊராட்சி) தலைமையிலான அதிகாரிகள் அங்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததன்பேரில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story