இறந்த பெண்ணின் உடலை தோளில் சுமந்தவாறு சாலையில் காத்திருந்த உறவினர்கள்
இறந்த பெண்ணின் உடலை தோளில் சுமந்தவாறு சாலையில் உறவினர்கள் காத்திருந்தனர்.
தா.பழூர்:
வழிவிட மறுப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் தனவேல். இவரது மனைவி விஜயலட்சுமி(வயது 65). இவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இறுதிச்சடங்குக்காக அவரது உறவினர்கள் விஜயலட்சுமியின் உடலை சுமந்துகொண்டு மயானத்திற்கு சென்றனர். தா.பழூர்- இடங்கண்ணி சாலையில் இருந்து மயானம் வரை செல்வதற்கு பாதை இல்லாததால், சிலரது வயல்வெளி வழியாக இறந்தவர் உடலை சுமந்து செல்வதை அப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்போது நில உரிமையாளர்கள் தங்கள் வயல்வெளி வழியாக உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்துவது கடந்த காலங்களில் நிகழ்ந்து வந்தது.
அதேபோல் நேற்று விஜயலட்சுமியின் உடலை அவரது உறவினர்கள் சுமந்து சென்றபோது, அப்பகுதியில் வயல்கள் வைத்துள்ள சில நபர்கள் உடலை கொண்டு செல்ல வழிவிட மறுத்துள்ளனர். இதனால் தோளில் உடலை சுமந்தபடி உறவினர்கள் சாலையிலேயே காத்திருந்தனர். பாதை தடுக்கப்பட்டு இருந்ததால் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
பயிர்கள் சேதம்
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் ஆகியோர் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பல ஆண்டுகளாக தங்கள் வயல்வெளி வழியாக பிள்ளையார்குளம் பகுதி மக்கள், இறந்தவர் உடலை எடுத்துச் செல்வதாகவும், அப்போது தங்கள் வயல்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சவ ஊர்வலத்தில் வருபவர்கள் மிதிப்பதால் அதிக அளவு பயிர்கள் சேதம் அடைவதாகவும், இதனால் ஒவ்வொரு முறையும் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உடலை கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதோடு பிரச்சினை முடிந்து விடுகிறது. ஆனால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு துறைகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பிள்ளையார்குளம் பகுதி மக்கள், தங்களுக்கு நிரந்தர மயான பாதையை அரசிடம் பேசி பெற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் வயல்வெளி வழியாக அவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறினர். இதனால் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
அதே நேரத்தில் சாலையில் உடலுடன் உறவினர்கள் காத்திருந்ததால் தா.பழூரில் இருந்து அண்ணங்காரம்பேட்டை சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள், வேன்கள், லாரிகள், அண்ணங்காரம்பேட்டை அரசு பஸ் ஆகியவை ஸ்தம்பித்து நின்றன. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து நில உரிமையாளர்களிடம், இந்த பிரச்சினைக்கு வருவாய் துறையினருடன் சேர்ந்து விரைவில் சுமூகமான நடவடிக்கை எடுக்க அரசு துறைகளுக்கு பரிந்துரை செய்து ஆவண செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் வாக்குறுதி கொடுத்தனர். இதனையடுத்து நில உரிமையாளர்கள் அந்த வழியாக உடலை எடுத்துச் செல்ல அனுமதித்தனர். பின்னர் அமைதியான முறையில் விஜயலட்சுமியின் உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story