முயல் வேட்டைக்கு சென்ற 4 பேர் சிக்கினர்
சேலத்தில் வனப்பகுதியில் முயல் வேட்டைக்கு வலைகளுடன் சென்ற 4 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
சேலம்:-
சேலத்தில் வனப்பகுதியில் முயல் வேட்டைக்கு வலைகளுடன் சென்ற 4 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
ரோந்து பணி
சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் முயல், மான் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடும் நபர்களை பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேர்வராயன் தெற்கு வனசரகத்துக்குட்பட்ட டி.பெருமாபாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று வனச்சரகர் சின்னதம்பி தலைமையில் வனவர் ராமசாமி, வனக்காப்பாளர் பார்த்திபன் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வனப்பகுதியில் முயல்களை வேட்டையாடுவதற்காக வலைகளுடன் 4 வாலிபர்கள் சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த வனத்துறையினர் அவர்களை பிடித்து அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள சேர்வராயன் தெற்கு வனசரக அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அபராதம் விதிப்பு
அதில், அவர்கள் டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த வேலுகுமார் (வயது 26), பிரதாப் (34), ரஞ்சித் (36), மணிகண்டன் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story