ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.30 லட்சம் திருடிய ராஜஸ்தான் வாலிபர் கைது


ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.30 லட்சம் திருடிய ராஜஸ்தான் வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 March 2022 2:48 AM IST (Updated: 18 March 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஜலகண்டாபுரத்தில் ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.30 லட்சம் திருடிய ராஜஸ்தான் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்:-
ஜலகண்டாபுரத்தில் ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.30 லட்சம் திருடிய ராஜஸ்தான் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜவுளி வியாபாரி
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சுந்தரம் செட்டி தெருவில் வசித்து வரும் இவர், மேச்சேரி, ஜலகண்டாபுரம் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய 3 இடங்களில் ஜவுளி கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவானிபால் சிங் (24) என்பவர், ஜலகண்டாபுரத்தில் ஆனந்த் வீட்டில் தங்கியிருந்து அவருக்கு சொந்தமான ஜவுளி கடையில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
ரூ.30 லட்சம் திருட்டு
இதனிடையே, ராஜஸ்தானில் உள்ள ஆனந்தின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 மாதங்களில் 3 ஜவுளி கடைகளில் வியாபாரம் ஆன ரூ.30 லட்சத்தை மேலாளர் பவானிபால் சிங்கிடம் கொடுத்துவிட்டு அதை வைத்திருக்குமாறு கூறி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த மாதம் 13-ந் தேதி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆப் செய்துவிட்டு பவானிபால் சிங் ரூ.30 லட்சத்தை திருடி சென்றுவிட்டதாகவும், இதனால் அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவை சந்தித்து ஆனந்த் புகார் செய்தார். இதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு இளமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய பவானிபால் சிங்கை வலைவீசி தேடி வந்தனர்.
வாலிபர் கைது
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் ஜாலிபா என்ற இடத்தில் பவானிபால் சிங் தலைமறைவாக பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு தலைமறைவாக இருந்த பவானிபால் சிங்கை பிடித்து கைது செய்து சேலத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.22 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story