தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 March 2022 2:48 AM IST (Updated: 18 March 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’க்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டம் வடமத்தூர் ஊராட்சி ஜம்புமடை கிராமத்தில் சுடுகாடு உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக மின்சார வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க வருவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டில் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-பொதுமக்கள், எருமப்பட்டி, நாமக்கல்.
பெயர் பலகை வைக்க வேண்டும்
சேலம் மாநகராட்சிக்குட்ட 14-வது வார்டில் உடையப்பா காலனி உள்ளது. சேலம் செரி ரோட்டில் இருந்து பிரிந்து செல்லும் இந்த பகுதியில் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் தபால்காரர் மூலம் தபால்கள் சரியாக வருவதில்லை. புதியதாக வரும் பொதுமக்களுக்கும் சரியான முகவரி  தெரிவதில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த தெருவிற்கு பெயர் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.வேலுமணி, உடையப்பா காலனி, சேலம்.
குரங்குகள் அட்டகாசம்
சேலம் மாவட்டம் தாத்தையங்கார்பட்டியை அடுத்த செங்கரடு கிராமத்தில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றுகின்றன. இந்த குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்கிறது. அவைகளை விரட்டினால் கடிக்க வருகின்றன. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை பயமுறுத்துகின்றன. இதனாலேயே மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் குழந்தைகள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே கூட வர அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.
-ரவிக்குமார், செங்கரடு, சேலம்.  
குடிநீர் வருமா?
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட காளிப்பட்டி பகுதியில் 18 நாட்கள் கடந்தும் குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.
-பொதுமக்கள், காளிப்பட்டி, நாமக்கல்.
சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பு
சேலம் மாநகராட்சி 60-வது வார்டு சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் கற்களை போட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை கால்வயை சீரமைத்து கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சீலநாயக்கன்பட்டி, சேலம்.
குண்டும், குழியுமான சாலை
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி காளி செட்டிப்பட்டி புதூரில் இருந்து வளையப்பட்டி செல்லும் சாலை படுமோசமாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி கற்கள் குத்தி டயர் பஞ்சர் ஆகும் நிலையும் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் குழிகள் தெரியாமல் கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story