அறுவடைக்கு பின் விதை தரத்தை பேணுவது எப்படி?
நெல், நிலக்கடலை அறுவடைக்கு பின், விதை தரத்தை பேணுவது எப்படி? என்பது குறித்து சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் விமலா தெரிவித்துள்ளார்.
சேலம்:-
நெல், நிலக்கடலை அறுவடைக்கு பின், விதை தரத்தை பேணுவது எப்படி? என்பது குறித்து சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் விமலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல், நிலக்கடலை விதை
விவசாயிகள் நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களை அறுவடை செய்து, பின் நேர்த்தி செய்து அடுத்த பருவத்திற்கு பயிர் செய்ய தேவையான விதையை சேமித்து வைக்க வேண்டும். அவ்வாறு சேமித்து வைக்கப்படும் விதை போதிய அளவு இனத்தூய்மை, புறத்தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதம் கொண்டிருப்பது அவசியமாகும். நிலக்கடலையில் பொக்கு விதைகள், உடைந்த விதைகள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச அளவு புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் பிற ரக கலப்பு ஆகியவை வரையறுக்கப்படுகிறது. நெல் விதையாக இருப்பின் புறத்தூய்மை 98 சதவீதத்துக்கு குறையாமலும், முளைப்புத்திறன் 80 சதவீதத்துக்கு குறையாமலும், ஈரப்பதம் 13 சதவீதம் மிகாமலும், பிற ரக கலப்பு 0.20 சதவீதத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விதை தரம்
நிலக்கடலையில் புறத்தூய்மை 96 சதவீதம் குறையாமலும், பொக்கு காய்கள் 4 சதவீதம் மிகாமலும், முளைப்புத்திறன் 70 சதவீதம் குறையாமலும் இருத்தல் அவசியமாகும். விவசாயிகள், சேமித்து வைத்திருக்கும் நெல், நிலக்கடலை விதைகள், விதை தரத்தினை கொண்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்ள, நெல் விதையாக இருப்பின் 100 கிராம் விதையினை துணிப்பையிலும், 50 கிராம் விதையை பாலிதீன் பையிலும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.
நிலக்கடலை எனில் 1 கிலோ விதையை துணிப்பையிலும், 50 கிராம் விதையை பாலிதீன் பையிலும் தனித்தனியாக எடுத்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் 403-ல் உள்ள மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி தெரிந்து கொள்ளலாம். ஒரு விதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணம் 30 ரூபாய் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story