தேர் சக்கரத்தில் சிக்கி தையல் தொழிலாளி சாவு


தேர் சக்கரத்தில் சிக்கி தையல் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 18 March 2022 2:56 AM IST (Updated: 18 March 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் திருவிழாவின்போது தேர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

லால்குடி
திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில், பிரமாண்டமான பெரிய தேரில் சோமாஸ் கந்தர், அம்மன் எழுந்தருளினர். சிறிய தேரில் முருகன், விநாயகர், சப்தரிஷிகள் எழுந்தருள 5 தேர்கள் முன்னும், பின்னுமாக சென்றன. லால்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரிய தேருக்கு முன்னதாக சென்ற விநாயகர் சிறிய தேரையும் பக்தர்கள் இழுத்து சென்று கொண்டிருந்தனர். முன்னாள் போலீஸ் நிலையம் அருகே தேர் சென்றபோது லால்குடி பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி கலியபெருமாள்(வயது 75) என்பவர் எதிர்பாராதவிதமாக தேரின் சக்கரத்தில் சிக்கினார். இதில், அவரது இரு கால்களும் நசுங்கின.
தொழிலாளி சாவு
 உடனே சிறிய தேரை நிறுத்திய பக்தர்கள் கலியபெருமாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கலியபெருமாள் உயிரிழந்தார். இதுகுறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர் சக்கரத்தில் சிக்கி கலியபெருமாள் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த தையல் தொழிலாளிக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவா்களில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது.

Next Story