டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்
பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பவானி
பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பவானி அந்தியூர் மெயின் ரோடு பகுதியில் அரசு மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த டாஸ்மாக் கடை அந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த கடையால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஒன்று திரண்டு அந்தியூர் மெயின் ரோடு பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரிடம் பெண்கள் கூறுகையில், ‘இங்குள்ள டாஸ்மாக் கடையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் மாலை நேரங்களில் வேலை முடிந்து அந்த வழியாக வீட்டிற்கு நடந்து செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி முடிந்து செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்,’ என்றனர். அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், ‘இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story