ஈரோடு ரெயில் நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பயணிகள் அவதி


ஈரோடு ரெயில் நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 18 March 2022 3:26 AM IST (Updated: 18 March 2022 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ரெயில் நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.

ஈரோடு
ஈரோடு ரெயில் நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.
குடிநீர் தொட்டி
ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் சுமார் 100 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 
கேரளா மாநிலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ஈரோடு மார்க்கமாக இயக்கப்படுகிறது. 
எனவே ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் ஏறுவதற்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வருகின்றனர்.
ரெயில் ஏறுவதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் டிக்கெட் கொடுக்கப்படும் பகுதியிலும், ஆலோசனை மையம் அருகிலும் சில மணிநேரம் காத்திருக்கின்றனர். 
பயணிகளின் வசதிக்காக தனியார் அமைப்பு சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. 
ஆனால் இந்த குடிநீர் தொட்டி உரிய பராமரிப்பு இல்லாமல் பயன்படாமல் உள்ளது. 
இதனால் ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகளும், முன்பதிவு டிக்கெட் எடுக்க வரும் பயணிகளும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
சுகாதாரமற்ற நிலை
இதுகுறித்து ரெயில்வே பயணிகள் கூறியதாவது:-
ஈரோடு ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் வளாகத்தில் தனியார் அமைப்பு சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ததால் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. 
ஆனால் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் உரிய பராமரிப்பு செய்யப்படாததால் குடிநீர் தொட்டி செயல்படாமல் உள்ளது. மேலும், தண்ணீர் பிடிக்கும் குழாய்கள் உள்ள தொட்டியில் எச்சில் துப்பப்பட்டு சுகாதாரமற்ற  நிலையில் கிடக்கிறது.
ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் கடைகளும் கிடையாது. எனவே குடிநீர் வாங்க வேண்டுமென்றால் மெயின்ரோட்டுக்கு சென்று கடைகளில் வாங்க வேண்டியுள்ளது. 
எனவே செயல்படாமல் உள்ள குடிநீர் தொட்டியை பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story