ஈரோட்டில் தகுதி சான்று இல்லாமல் இயக்கிய 5 வாகனங்கள் பறிமுதல்; வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில் தகுதி சான்று இல்லாமல் இயக்கிய 5 வாகனங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் தகுதி சான்று இல்லாமல் இயக்கிய 5 வாகனங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
வாகன தணிக்கை
ஈரோடு மாநகர் பகுதியில் இயக்கப்படும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் தகுதி சான்று பெற்றுள்ளனவா? என சோதனை செய்ய வட்டார போக்குவரத்து துணை ஆணையாளர் சுரேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவை நாதன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் முன்னிலையில் நேற்று மாலை ஈரோடு-சத்தி ரோட்டில் மாமரத்துப்பாளையம், சித்தோடு போன்ற பகுதிகளில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது அந்த வழியாக தனியார் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை அழைத்து வந்த, பள்ளிக்கூடங்களுக்கு சொந்தமில்லாத 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 3 வாகனங்கள் தகுதி சான்று பெறாமல் இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
5 வாகனங்கள் பறிமுதல்
இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களில் இருந்த மாணவ-மாணவிகளை அவர்களது வீட்டில் இறக்கி விட்ட பின்னர் அந்த 3 வாகனங்களையும் உடனடியாக போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் உரிமம் இல்லாமல் இயக்கிய ஒரு பயணிகள் ஆட்டோ, வரி கட்டாமல் இயக்கப்பட்ட ஒரு சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 60-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 10 கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வாகன உரிமையாளர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கையில் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story