பள்ளி வேனில் இருந்து இறங்கிய சிறுவன் சக்கரத்தில் சிக்கி பலி
பெரணமல்லூர் அருகே பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே அதே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலியானான். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேத்துப்பட்டு
பெரணமல்லூர் அருகே பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே அதே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலியானான். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எல்.கே.ஜி.யில் சேர்த்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள கொருக்காத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 45), நெசவுத் தொழிலாளி.
இவரது மனைவி ராணி (37). இவர்களுக்கு விக்னேஷ் (7), சர்வேஷ் (3) என்ற இரு மகன்கள். இதில் விக்னேஷ் கொருக்காத்தூரை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் ஜோதி அவருடைய மனைவி ராணி ஆகிய இருவரும் தங்களின் முதல் மகன் விக்னேஷ் படிக்கும் அதே பள்ளியில் இரண்டாவது மகன் சர்வேஷை நேற்று எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து விட்டு வீடு திரும்பினார்கள்.
மாலையில் பள்ளி முடிந்ததும் சர்வேஷ், விக்னேஷ் ஆகியோர் சக மாணவர்களுடன் பள்ளி வேனில் ஊருக்கு திரும்பினர்.
வேன் சக்கரத்தில் சிக்கி பலி
வழக்கம்போல் கொருக்காத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வேன் நிறுத்தப்பட்டது. தங்கள் குழந்தைகளை அழைத்துச்செல்ல பெற்றோரும் அங்கு தயாராக நின்று கொண்டிருந்தனர்.
சிறுவனான சர்வேஷின் பெற்றோரும் சர்வேஷ் இறங்கியவுடன் அவனை வாரி அணைத்து வீட்டுக்கு அழைத்துச்செல்ல இருந்தனர்.
ஆனால் சர்வேஷ் இறங்குவதற்குள் கவனக்குறைவாக டிரைவர் வேனை ஓட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் சர்வேஷ் நிலை தடுமாறி கீழே விழுந்தான். அடுத்த வினாடியே வேனின் பின் சக்கரம் அவனது தலை மீது ஏறியது.
இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சர்வேஷ் பலியானான். உடனே வேனை நிறுத்தி விட்டு டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடி தலைமறைவானார்.
கதறல்
இதை பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தனியார் பள்ளி வேன் டிரைவரை தேடி வருகின்றனர்
பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே அதே பள்ளி வேனில் சிக்கி சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story