தையல் கூட்டுறவு சங்கத்தை இரண்டாகப் பிரிக்க எதிர்ப்பு; சங்க தலைவி கைது


தையல் கூட்டுறவு சங்கத்தை இரண்டாகப் பிரிக்க எதிர்ப்பு; சங்க தலைவி கைது
x
தினத்தந்தி 18 March 2022 7:40 PM IST (Updated: 18 March 2022 7:40 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தை இரண்டாகப் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டுறவு சங்க தலைவி கைது செய்யப்பட்டார்.

தையல் கூட்டுறவு சங்கம்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட விக்னேஸ்வரா நகர் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சங்கத்திற்கு தமிழக அரசு மொத்தமாக துணிகளைக் கொடுத்து அதனை கூலி அடிப்படையில் தைத்து பள்ளிக்கல்வித்துறை மூலமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக வினியோகம் செய்து வருகிறார்கள்.

கைது

இந்த மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரித்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென என ஒரு தரப்பினர் மனு அளித்தனர். அதேபோல் பிரிக்க கூடாது என தெரிவித்து ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாரிகள் மாவட்ட மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரித்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான பணியில் மும்முரமாக இறங்கினார்கள்.

அப்போது கூட்டுறவு சங்கத்தின் தலைவி பரிமளா தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது போலீசாருக் கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பரிமளாவை பெண் போலீசார் சுற்றிவளைத்து குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினார்கள். இதைக்கண்டு தடுக்க ஓடி வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பரிமளாவின் கணவர் வீரசேகர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கூட்டுறவு சங்கத்தில் இருந்த அனைத்து பொருட்களை யும் வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர்.


Next Story