வாடகை செலுத்தாத 10 கடைகள் நேற்று சீல் வைக்கப்பட்டன


வாடகை செலுத்தாத 10 கடைகள் நேற்று சீல் வைக்கப்பட்டன
x
தினத்தந்தி 18 March 2022 7:52 PM IST (Updated: 19 March 2022 11:26 AM IST)
t-max-icont-min-icon

வாடகை செலுத்தாத 10 கடைகள் நேற்று சீல் வைக்கப்பட்டன

காங்கேயம், 
காங்கேயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 10 கடைகள் நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டன. மேலும் குடிநீர்க் கட்டணம் செலுத்தாத 27 குடிநீர் இணைப்புகளும் துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
10 கடைகளுக்கு ‘சீல்’
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பஸ் நிலையம் அருகே, நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம், தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் 180 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் 48 கடைகள் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக வாடகை செலுத்தப்படாமல் செயல்பட்டு வந்தன. இவைகளின் நிலுவைத் தொகை சுமார் ரூ.22 லட்சம் ஆகும்.
இந்த கடைகளுக்கு உரிய வாடகை செலுத்த வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வாடகை செலுத்த வலியுறுத்தி சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும், நகராட்சி ஊழியர்கள் நேரில் சென்றும் அறிவுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் வாடகை செலுத்தாத 48 கடைகளில் காங்கேயம் பஸ் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 10 கடைகள் நேற்று காலை நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலையில் பூட்டி ‘சீல்’வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், நகராட்சி வருவாய் ஆய்வாளர் பி.செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
27 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
காஙகேயம் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு 8,500 குடிநீர் இணைப்புகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் குடிநீர்க் கட்டணம் மற்றும் வைப்புத் தொகையாக நகராட்சிக்கு ரூ.97 லட்சம் வர வேண்டியுள்ளது.
இதையடுத்து முதற்கட்டமாக காங்கேயம் நகராட்சிப் பகுதியில் குடிநீர்க் கட்டணம் செலுத்தாமல் அதிக நிலுவைத்தொகை உள்ள 27 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகள் நேற்று காலை நகராட்சி ஆணையரின் முன்னிலையில் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நகராட்சி பொறியாளர் திலீபன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

Next Story