ரெட்டியார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி உயிருடன் எரித்து கொலை கொலையாளிகள் யார்? போலீசார் விசாரணை


ரெட்டியார்சத்திரம் அருகே  மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி உயிருடன் எரித்து கொலை கொலையாளிகள் யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 March 2022 8:20 PM IST (Updated: 18 March 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

ரெட்டியார்சத்திரம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற தொழிலாளி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னிவாடி:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அடுத்த குட்டத்துப்பட்டி பிரிவு அருகே காவிரி கூட்டுக்குடிநீர் நீரேற்றும் நிலையம் உள்ளது. இந்த வளாகம் அருகே நேற்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து எரிக்கப்பட்டு கரிக்கட்டையாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
பின்னர் அவர்கள் இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்போில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
கல்லால் தாக்குதல்

அப்போது நீரேற்று நிலைய வளாகத்தில் இருக்கும் கல்பலகையில் ரத்தக்கறை இருந்தது. அதன் கீழே ஒரு கருங்கல் கிடந்தது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் இறந்தவரை மர்மநபர்கள் கல்லால் தாக்கி மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது. 
பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கூலித்தொழிலாளி
மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் இறந்தவர் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள சில்வார்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கணேசன்(வயது 36) என்பது தெரியவந்தது. கணேசன் எரிக்கப்பட்ட இடத்தின் அருகே பாதி எரிந்த நிலையில் ஒரு செல்போன் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி அதில் உள்ள சிம்கார்டுகளில் பதிவான எண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். 
மர்மநபர்கள் கணேசனை கல்லால் தாக்கி உயிரோடு அவரை அங்கிருந்து இழுத்து சென்று மோட்டார்சைக்கிளில் உட்கார வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து உள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பரபரப்பு

இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணேசனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், பிரவீன்(8) சஞ்சனாஸ்ரீ(5) என்ற குழந்தைகளும் உள்ளனர். கணேசன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் இது போல மோட்டார்சைக்கிளுடன் நிதிநிறுவன அதிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தற்போது அதே போன்று மீண்டு்ம் தொழிலாளி மோட்டார்சைக்கிளுடன் எரித்து கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Next Story