முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா


முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 18 March 2022 10:44 PM IST (Updated: 18 March 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சங்கராபுரம்,

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் கரியப்பா நகரில் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கோட்டை மேட்டில்  உள்ள கோமுகி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவில் உள்ள வள்ளி, தெய்வானை செல்வ முருகன் கோவிலுக்கும் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. 

சங்கராபுரம்

சங்கராபுரம் பூட்டை சாலையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் மணி நதியில் இருந்து சக்திகரகம் அழைத்து வரப்பட்டது. அப்போது விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, காவடி எடுத்தும், அலகு குத்தியும், தேர் இழுத்தும் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தீ மிதி திருவிழா

இதேபோல் சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி தீமிதி திருவிழாவும், வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. மேலும் தேவபாண்டலம் குந்தவேல் முருகன், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகப்பெருமான், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தியாகதுருகம்

தியாகதுருகத்தில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி நேற்று சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  முன்னதாக கோட்ட குளக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

உளுந்தூர்பேட்டை 

உளுந்தூர்பேட்டை சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. பங்குனி உத்திர விழாவான நேற்று உளுந்தூர்பேட்டை வேடசெட்டி கோவில் குளக்கரையில் உள்ள முருகனுக்கு காவடி ஸ்தாபன பூஜை நடைபெற்றது. பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சுப்பிரமணியசாமி கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story