வரவேற்கத்தக்க அம்சங்களுடன் தமிழக பட்ஜெட்
வரவேற்கத்தக்க அம்சங்களுடன் தமிழக பட்ஜெட் அமைந்துள்ளதாக தேனி மாவட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
தேனி:
பட்ஜெட்
தமிழக சட்டமன்றத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
வெங்கடபூபதி (மாற்றுத்திறனாளி, தேனி) :- தமிழக அரசு மக்களின் நலனில் அக்கறையோடு பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்கு ரூ.450 கோடியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடுமையான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் பயனளிக்கும். மகிழ்ச்சியுடன் இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன்.
சையது மைதீன் (விளையாட்டு பயிற்சியாளர், தேனி) :- கல்வி, விளையாட்டு, மருத்துவம், வேளாண்மை உள்பட பல துறைகளுக்கும் பட்ஜெட்டில் சிறப்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல் திட்டம் உருவாக்கப்படும் என்பதோடு, இந்த திட்டத்தில் சிறந்த வீரர்களை உருவாக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டதும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தகுதியும், திறமையும் உள்ள விளையாட்டு வீரர்கள் பொருளாதார தடைகளை தாண்டி, பதக்கங்களை வெல்ல வாய்ப்பு ஏற்படும்.
இல்லம் தேடி கல்வி
ரவிச்சந்திரன் (ஆசிரியர், உத்தமபாளையம்):- கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவ, மாணவிகளுடன் கற்றல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. அரசு பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.
ராணி (பெண் விவசாயி, கொம்புகாரன்புலியூர்) :- பட்ஜெட்டில் நிலத்தடிநீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ.2,787 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். இந்த நிதியின் மூலம் ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகள் போன்று வறட்சியான பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அந்த திட்டம் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
புத்தக கண்காட்சி
சுவாதி (பிளஸ்-2 மாணவி, கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி) :- அரசு பள்ளி மாணவிகள் பலரும் பொருளாதார வசதியின்றி பிளஸ்-2 முடித்துவிட்டு, மேல்படிப்பு படிப்பதில்லை என்ற நிலை உள்ளது. இதனால், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போன்று அரசு பள்ளி மாணவிகளுக்கு இது வரப்பிரசாதம் போன்றது.
லட்சுமி விசாகன் (இலக்கிய ஆர்வலர், தேனி) :- புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்றும், ஆண்டுக்கு 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது இலக்கிய ஆர்வலர்களுக்கு இனிப்பான செய்தி. புத்தக வாசிப்பை பள்ளிகளில் கட்டாய பாட வேளையாகவும் வைக்கலாம். தமிழ் வளர்ச்சிக்கும், தொல்லியல் ஆய்வுகளுக்கும் முக்கியத்துவமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. தமிழ் சார்ந்து இயங்கி வரும் அமைப்புகளுக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. அருங்காட்சியகங்கள் அமைப்பதை அதுதொடர்புடைய அந்தந்த நிலப்பரப்பிலேயே அமைத்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story