பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 18 March 2022 10:49 PM IST (Updated: 18 March 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திரத்தையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குலதெய்வ கோவில்களில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

நாகர்கோவில்,
பங்குனி உத்திரத்தையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குலதெய்வ கோவில்களில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். 
பங்குனி உத்திரம்
பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரத்தன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் குலதெய்வ வழிபாடு செய்தால் குடும்பத்தில் துன்பங்கள் விலகி, நன்மை பெருகும் என்பதும் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் நேற்று கொண்டாடப்பட்டது.  
இதையொட்டி நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நாகர்கோவில் பார்வதிபுரம் அய்யப்பசாமி கோவில், வடசேரி சாஸ்தா கோவில், நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், பள்ளவிளை தர்மசாஸ்தா கோவில், கண்ணன்குளம் அய்யனார் கோவில், ஒழுகினசேரி அய்யப்ப சாஸ்தா கோவில், வெட்டூர்ணிமடம் தர்மசாஸ்தா கோவில், பறக்கை பாலாறு அய்யனார் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் பக்தா்கள் குடும்பம், குடும்பமாக வந்த சாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் வழிபாடு
பக்தர்களின் வசதிக்காக நேற்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து நாகர்கோவிலுக்கும் 87 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் கோவில் வளாகத்தில் சாமிக்கு பொங்கலிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் செய்தனர். 
இந்த விழாவையொட்டி, நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Next Story