கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு


கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்  குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 March 2022 10:59 PM IST (Updated: 18 March 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

குழித்துறை அருகே கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

களியக்காவிளை, 
குழித்துறை அருகே கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
முன்விரோதம்
குழித்துறை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் கமேஷ் (வயது44). இவருக்கும் பாலவிளை வலியவிளையைச் சேர்ந்த ராஜபுத்திரன்(48), பழவார் பகுதியைச் சேர்ந்த சேகர்லால் (50) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 
கடந்த 2009-ம் ஆண்டு கமேஷ் தனது நண்பர் ரெஜின் (34)  என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குழித்துறை அருகே உள்ள கல்லுக்கட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அரிவாள் வெட்டு
அப்போது ராஜபுத்திரன், சேகர்லால், களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் கல்லம்பொற்றையை சேர்ந்த ஜான்மெடல், மீனச்சல் காட்டுவிளையை சேர்ந்த சதானந்தன் (50) ஆகியோர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தனர். தொடர்ந்து 4 பேரும் சேர்ந்து கமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க முயன்ற நண்பர் ரெஜினையும் தாக்கிவிட்டு அவர்கள் தப்பி சென்றனர். 
படுகாயம் அடைந்த கமேஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அப்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரெஜின் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் ராஜபுத்திரன் உள்பட 4 பேர் மீதும் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.  
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை குழித்துறை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்  நீதிபதி சரவணபவன் தீர்ப்பு வழங்கினார். இதில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ராஜபுத்திரன், சேகர்லால், ஜான்மெடல், சதானந்தன் ஆகிய 4 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Next Story