முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை-காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பங்குனி உத்திரத்தையொட்டி புதுக்கோட்டையில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுக்கோட்டை,
பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதன்படி புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் உள்ள தண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு பாலாபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின் தண்டாயுதபாணி சுவாமிக்கு சந்தனக்காப்பு, மலர் அலங்காரத்திலும், விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரத்திலும் உற்சவர் மலர் அலங்காரத்திலும் அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்தனக்காப்பு அலங்காரம்
புதுக்கோட்டை அருகே உள்ள குமரமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் புதுக்கோட்டை நகரில் உள்ள நயினாராஜூ தண்டாயுதபாணி கோவிலிலும் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
கீரனூரில் உள்ள சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விராலிமலை முருகன்
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி- தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் அருணகிரிநாதருக்கு முருகன் அஷ்டமாசித்திகளை வழங்கி திருப்புகழ் பாடவைத்த தலமாகவும், நாரதருக்கு பாவ விமோச்சனம் கொடுத்த தலமாகவும் விளங்கி வருகிறது.
பங்குனி உத்திரத்தையொட்டி முருகனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றி சந்தன காப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற சாமிக்கு முடி காணிக்கை செலுத்தினர். கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை சுவாமி தெப்பக்குளத்திலிருந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியை முடித்த பிறகு அங்கிருந்து மயில் வாகனத்தில் முருகன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாட்டிய குதிரைகளுடன் ஊர்வலம்
கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி தூக்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை சுவாமிக்கு கீரமங்கலம் கிராமத்தின் சார்பில் சிவன் கோவிலில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளம், நாட்டிய குதிரைகளுடன் ஊர்வலமாக பட்டு சீர் கொண்டு சென்றனர்.
மண்டையூர் பாலதண்டாயுதபாணி கோவில்
விராலிமலை ஒன்றியம், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மண்டையூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று காலை மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல செங்களாக்குடி, சாத்திவயல், களமாவூர், பாத்திமாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மலையாண்டி கோவில்
பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டியில் பிரசித்தி பெற்ற மலையாண்டி கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி சுப்பிரமணிய சுவாமி புஷ்ப அலங்காரத்துடன் வீதியுலா வந்தார். அதனை தொடர்ந்து வலையப்பட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக பொன்-புதுப்பட்டி, அண்ணா சாலை, காந்தி சிலை, நகைக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் காவடி எடுத்து தலையில் பால்குடம் சுமந்து உடம்பில் அலகு குத்தி கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பங்குனி உத்திரத்தையொட்டி கேரளா செண்டை மேளம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கிராமிய பல்சுவை மேடை நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
வெற்றிவேலன் கோவில்
திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி மலைமேல் உள்ள வள்ளி-தெய்வானை உடனுறை வெற்றிவேலன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை கோவில் பிரகாரத்தில் தேர் பவனி நடைபெற்றது. இரவு கோவில் வளாகத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்ட கலை அரங்கத்தில் வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. இதேபோல் மாத்தூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவரங்குளம் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர் வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பால்குடம், காவடி
கீரனூர் கொங்காணிக்கருப்பர் கோவிலில் இருந்து முருக பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பாத யாத்திரையாக விசலிக்கோவிலில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றனர். வழி நெடுகிலும் பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் கால்களில் தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர். காரையூர் அருகே உள்ள சொரியம்பட்டி ஓம் சக்தி விநாயகர் கோவிலில் ஓம்சக்தி குமரனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சண்முகா அர்ச்சனை, கணபதி ஹோமம், ஸ்கந்த மாலா மந்திர ஹோமம் மற்றும் ஒளியமங்கலம் ஒலியநாயகி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
அரிமளம் பேரூராட்சி பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு 12 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மலர் பூஜையும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோன்று கீழப்பனையூர் கிராமத்தில் உள்ள சுந்தர விநாயகருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அன்னதானம்
ஆவுடையார்கோவில் அருகே வீழிமங்களம் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து பூக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் அர்ச்சனைகள் செய்து முருகனை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வெளியத்தூர் செல்வ விநாயகர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வள்ளி திருமணம் நாடகம்
ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றி ஆண்டவர் கோவிலில் பால்குடம், கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை கோவிலுக்கு மேள தாளத்துடன் பக்தர்கள் கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சிலர் காவடி எடுத்து வந்தனர். இதேபோல் பெண்கள் மாவிளக்கு ஏற்றி வைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை 6 மணியளவில் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.
Related Tags :
Next Story