அரசு பஸ் மீது சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பலி
தோகைமலை அருகே அரசு பஸ் மீது சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் காயம் அடைந்தார்.
தோகைமலை,
டிரைவர் பலி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள பாப்பம்பாளையம் சேம்பர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 41). சரக்கு ஆட்டோ டிரைவர். இவரது உறவினர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள களத்துப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி (50). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு சரக்கு ஆட்டோவில், மணப்பாறையில் இருந்து திருச்செங்கோட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். சரக்கு ஆட்டோவை அர்ஜுனன் ஓட்டினார். ரெங்கசாமி அருகில் அமர்ந்து வந்தார்.
அப்போது கரூர் மாவட்டம், கழுகூர் மெயின் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் அரசு பஸ் பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அர்ஜுனன் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ, பஸ்சின் முன் பகுதியில் மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கி தூக்கி வீசப்பட்ட அர்ஜுனன் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். ரெங்கசாமி காயம் அடைந்தார். இதில் சரக்கு ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கி சேதமடைந்தது. மேலும், அரசு பஸ்சின் முன் பகுதி சேதமானது.
வழக்கு
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த ரெங்கசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாைற அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அர்ஜுனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் பாபு கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story