கல்லூரி பஸ்-கார் மோதல்; தம்பதி உள்பட 3 பேர் பலி
கல்லூரி பஸ்- கார் மோதிய விபத்தில் காரில் இருந்த தம்பதி உள்பட 3 பேர் பலியானார்கள். கல்லூரி மாணவிகள் 7 பேர் காயம் அடைந்தனர்.
ராஜபாளையம்.
கல்லூரி பஸ்- கார் மோதிய விபத்தில் காரில் இருந்த தம்பதி உள்பட 3 பேர் பலியானார்கள். கல்லூரி மாணவிகள் 7 பேர் காயம் அடைந்தனர்.
கல்லூரி பஸ்-கார் மோதல்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார், தனது மனைவி ராஜேசுவரி, உறவினரான பெரியக்காள் என்ற மூதாட்டி ஆகியோரை அழைத்துக் கொண்டு காரில் தென்காசி அருகே உள்ள கோவிலுக்கு சென்றார்.
பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக அவர்கள் காரில் மதுரை நோக்கி வந்தனர். அந்த காரை முத்துக்குமார் ஓட்டினார். ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை அருகே வந்த போது, எதிரே தனியார் பெண்கள் கல்லூரி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சும், முத்துக்குமார் ஓட்டி வந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன..
3 பேர் பலி
இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் முத்துக்குமார் சிக்கிக் கொண்டார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அருகே அமர்ந்திருந்த ராஜேசுவரி வெளியே விழுந்து உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மூதாட்டி பெரியக்காள் காரின் உள் பகுதியில் தலையில் அடிபட்டு பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து வந்தனர். 2 பெண்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான முத்துக்குமாரை மீட்பதில் போராட்டம் ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
விபத்தில் சிக்கிய வாகனங்கள் நடுரோட்டில் கிடந்ததால் மதுரை-தென்காசி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசாருடன் பொது மக்களும் இணைந்து முத்துக்குமார் உடலை மீட்டு பரிேசாதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
7 மாணவிகள் காயம்
இந்த விபத்தில் கல்லூரி பஸ்சின் டிரைவர் ராமசாமி காயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அதில் பயணித்த விஜயலட்சுமி, சிவலட்சுமி, அபிநயா, ஹரிப்பிரியா, லேமா, திவ்யா, ஜெயவீரலட்சுமி ஆகிய 7 மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். சம்பவ இடத்தில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story