சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு


சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு
x
தினத்தந்தி 19 March 2022 1:37 AM IST (Updated: 19 March 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர விழாவையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

நெல்லை:
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சாஸ்தா கோவில்களில் குவிந்த பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

பங்குனி உத்திர திருவிழா
பங்குனி உத்திர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்ட சாஸ்தா கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு வரையிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பொங்கலிட்டும், மாலை சாத்தி அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.
தொடர்ந்து கருப்பசாமி, சுடலைமாட சுவாமி, உதிரமாடசாமி, அக்னிமாடசாமி, சங்கிலி மாடசாமி, தளவாய் மாடசாமி, கரடி மாடசாமி, முன்னடி மாடசாமி, முண்டசாமி, கொம்புமாடசாமி, சப்பாணி மாடசாமி, பட்டவராயன் உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, படையல் பூஜை நடந்தது. ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்.

கரையடி மாடசாமி கோவில்
சேரன்மாதேவி அருகே பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் மற்றும் வீரியப்பெருமாள் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
காலையில் பால்குட ஊர்வலம், மதியம் கும்பாபிஷேகம், சாஸ்தா மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சாஸ்தா கோவில்கள்
இதேபோன்று அம்பை அருகே உள்ள மெய்யப்ப சாஸ்தா கோவில், கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், படப்பகுறிச்சி குளத்துப்புழை தர்மசாஸ்தா கோவில், மானூர் கீழப்பிள்ளையார்குளம் திருமேனி அய்யனார் சாஸ்தா கோவில், மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா கோவில், தென்திருப்பேரை கடம்பாகுளம் கரையில் உள்ள பூலுடையார் சாஸ்தா கோவில், நிறைகுளத்து சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, நரசிங்கநல்லூர் முருகுவுடையார் சாஸ்தா கோவில், டவுன் தடிவீரன் சாஸ்தா, மேகலிங்க சாஸ்தா, மேலப்பாளையம் குறிச்சி குலசேகர பாண்டிய மகாராஜா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா கோவில், பூமாதேவி கோவில், நெல்லை வண்ணார்பேட்டை குட்டத்துரை சாஸ்தா கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் அதிகாலையில் இருந்து பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு மற்றும் பொங்கலிடுதல், படையல் பூஜை போடுதல், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

Next Story