பாலமுருகன் கோவில் தேரோட்டம்
பாலமுருகன் கோவில் தேரோட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
தேரோட்டம்
பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் 42-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி அனுக்கை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, மண் எடுத்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகமும், இரவில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக பாலமுருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் கடந்த 16-ந்தேதி நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை சப்பர தேரோட்டம் நடந்தது. சப்பரத்தேர் எளம்பலூர் சாலை, காமராஜர் வளைவு, பனிமாதா காலனி, வடக்குமாதவி சாலை, சாமியப்பா நகர் வழியாக இழுத்து வரப்பட்டு மாலையில் மீண்டும் கோவிலை அடைந்தது. பாலமுருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகள் சப்பரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து மூலவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மூலவரை தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மஞ்சள் நீர் விடையாற்றி விழா நடக்கிறது. இதைத்தொடர்ந்து 25-ந்தேதி பஞ்சாட்சர திருவிழா (திருத்தேர் 8-ம் திருவிழா) மக்கள் நற்பணி மன்றம் சார்பில் நடக்கிறது. உற்சவ ஏற்பாடுகளை திருக்கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
வேப்பந்தட்டை
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த பில்லங்குளம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை முருகன் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சக்தி அழைத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை கோவில் வளாகத்தில் தொடங்கியது.
முருகப்பெருமான் மங்கள இசையுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் கோவிலை சென்றடைந்தது. இதில் பில்லங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story