மேற்கு வங்காளத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்து வீடுகளில் திருடிய 2 பேர் கைது; ரூ.38 லட்சம் தங்க நகைகள் மீட்பு


மேற்கு வங்காளத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்து வீடுகளில் திருடிய 2 பேர் கைது; ரூ.38 லட்சம் தங்க நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 19 March 2022 2:49 AM IST (Updated: 19 March 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்து வீடுகளில் திருடி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.38 லட்சம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

விமானத்தில் பெங்களூருவுக்கு...

  பெங்களூரு பானசாவடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ஹரிதாஸ் பராய்(வயது 37), பார்த கல்தார்(32) என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் மேற்கு வங்காளத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வருவார்கள்.

  பெங்களூருவில் உள்ள விடுதியில் சில நாட்கள் அறை எடுத்து 2 பேரும் தங்குவார்கள். அப்போது பெங்களூருவில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவார்கள். எந்த வீட்டு முன்பு பத்திரிகைகள் எடுக்கப்படாமல் கிடக்கிறது, எந்த வீடுகள் தொடர்ந்து திறக்கப்படாமல் இருக்கிறது என்பதை கவனிப்பார்கள். அந்த வீட்டில் வசிப்பவர்கள் வெளியூருக்கு சென்றிருப்பதை 2 பேரும் உறுதி செய்வார்கள்.

ரூ.38 லட்சம் நகைகள்

  பின்னர் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகைகள், பணத்தை திருடுவதை 2 பேரும் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் பெங்களூருவில் திருடும் நகைகளுடன், மேற்கு வங்காளத்திற்கு விமானத்தில் செல்வாா்கள். அங்கு தங்க நகைகளை விற்று கிடைக்கும் பணத்தை வைத்து இருவரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிந்தது. ஏற்கனவே டெல்லி போலீசார், இவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு மீண்டும் வீடுகளில் திருடி வந்தது தெரியவந்தது.

  பெங்களூரு பானசாவடியில் உள்ள வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக, மேற்கு வங்காளத்திற்கு சென்று பானசாவடி போலீசார் 2 பேரையும் கைது செய்து, பெங்களூருவுக்கு அழைத்து வந்திருந்தனர். கைதான 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் ரூ.38 லட்சம் மதிப்பிலான 745 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கைதான ஹரிதாஸ் பராய், பார்த கல்தார் ஆகிய 2 பேர் மீதும் பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story