வங்கி கடன் வழங்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு


வங்கி கடன் வழங்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 19 March 2022 2:57 AM IST (Updated: 19 March 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் வங்கி கடன் வழங்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்புக்கு உள்ளானார்கள்.

மதுரை
கலெக்டர் அலுவலகத்தில் வங்கி கடன் வழங்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்புக்கு உள்ளானார்கள்.
வேலை வாய்ப்பு
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கி கடன் வழங்கும் முகாம் நடந்தது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம், வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டம், பெட்டி கடை வைப்பதற்கான வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டம், ஆவின் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை செய்யும் மையம் அமைக்கும் திட்டத்திற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவதற்காக  இந்த முகாம் நடந்தது.
கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் காளிதாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, மத்திய கூட்டுறவு வங்கிகளின் இணைபதிவாளர் ஜீவா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் செல்வம், ஆபின் துணை மேலாளர் ரவீந்தரன், மாவட்ட தொழில் மையத்தை சேர்ந்த பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிரம்பிய அரங்கம்
இந்த கூட்டம் கலெக்டர் அலுவலக புதிய வளாகத்தின் தரைதள அரங்கத்தில் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து விட்டு கலெக்டர் அங்கிருந்து சென்று விட்டார். அதன்பின் ஒவ்வொரு அதிகாரிகளும் தங்கள் துறை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் குறித்து பேசினர். இந்த அரங்கத்திற்குள் வர முடியாமல் வெளியே ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வாகனத்தில் அமர்ந்து இருந்தனர். இந்த முகாம் குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-
இந்த முகாமில் கலந்து கொள்ளுங்கள், கடன் தருவோம் என்று கூறினார்கள். அதனை நம்பி வந்தோம். ஆனால் இங்கு முகாம் நடந்த அரங்கத்திற்குள் எங்களால் செல்ல முடியவில்லை. இது போன்ற முகாம்களை திறந்த வெளியில் நடத்த வேண்டும். அப்போது தான் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் எளிதாக வந்து கலந்து கொள்ள முடியும். எங்கள் வாகனத்தை அரங்கத்தில் நிறுத்தி விட்டு, எங்களால் எப்படி போய் இருக்கையில் அமரமுடியும். அரங்கம் நிரம்பி விட்டதால் பலரும் வெளியே நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. முகாமின் முடிவில் ஒரு விண்ணப்பத்தை மட்டும் கொடுத்து விட்டு வங்கியில் போய் பாருங்கள் என்று கூறி விட்டனர்.
அரசுக்கு கணக்கு
இது போன்ற முகாம்களில் வங்கி அலுவலர்களை அழைத்து வந்து இருக்க வேண்டும். எங்களிடம் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை பெற்று இங்கேயே பரிசீலித்து கடன் நிலை குறித்து தெரிவித்து இருக்க வேண்டும். இது போன்ற முகாம்கள் கடன் தருவதற்காக அல்ல, அரசுக்கு கணக்கு தர வேண்டும் என்பதற்காக நடத்துகிறார்கள். கடந்த ஆண்டில் வெறும் 38 மாற்றுத்திறனாளிகளுக்கு தான் கடன் வழங்கி இருக்கிறார்கள். பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளின் மனுவை நிராகரித்து விடுகிறார்கள். உடலால் பாதிக்கப்பட்டு இருக்கும் எங்களை பரிதவிக்கவிடுவதும், அலைகழிப்பதும் சரியானதா என்பதனை அதிகாரிகள் உணர்ந்து நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story