மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்க கோரி மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்த முடிவு; கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
மேகதாது திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரைச வலியுறுத்துவது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
அனைத்துக்கட்சி கூட்டம்
கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறை, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இது 66 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்டது ஆகும். கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயாரித்து ஒப்புதல் வேண்டி மத்திய அரசு நீர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த திட்ட அறிக்கை தற்போது காவிரி நிர்வாக ஆணையத்தில் உள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்ாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு, இது குடிநீர் நோக்கம் கொண்டதால் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே மேகதாது திட்ட பணிகளை உடனடியாக தொடங்க கோரி கர்நாடக காங்கிரஸ் கட்சி மேகதாது முதல் பெங்களூரு வரை பாதயாத்திரை நடத்தியது. இதையடுத்து கடந்த 4-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேகதாது தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று மாலை நடைபெற்றது.
நதிநீர் பிரச்சினை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், சட்டத்துறை மந்திரி மாதுசாமி, தலைமை செயலாளர் ரவிக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதா தளம் (எஸ்) கட்சி துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள் எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், டி.கே.சிவக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதில், அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேகதாது உள்பட மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க எனது தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு காவிரி நிர்வாக ஆணையத்திடம் கோரியுள்ளோம். கடந்த 4, 5 முறை அந்த ஆணைய கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெற முயற்சி
இறுதியாக அந்த விஷயத்தை காவிரி நிர்வாக ஆணைய நிகழ்ச்சி நிரலில் சேர்த்து அதற்கு அனுமதி வழங்குமாறு கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கர்நாடக அரசு அதிகாரிகள் கடிதம் எழுதுவார்கள். நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் வருகிற 21 அல்லது 22-ந் தேதி டெல்லி செல்கிறார். அவர் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்தித்து, காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த உள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் நானும் டெல்லி சென்று ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்தித்து இந்த திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு வலியுறுத்த முடிவு செய்துள்ளேன். இதனால் பலன் கிடைக்காவிட்டால் அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்து சென்று ஜல்சக்தித்துறை மந்திரியை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் மகதாயி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் அனுமதி பெற முயற்சி செய்யப்படும். கிருஷ்ணா மேலணை திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சட்ட ரீதியாக முயற்சி மேற்கொள்ளப்படும்.
தலைமை நீதிபதிக்கு கடிதம்
இந்த வழக்கை விசாரிக்கும் 2 நீதிபதிகள் ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்தவர். இது கர்நாடகம் தொடர்பான வழக்கு என்பதால் கர்நாடக நீதிபதி வழக்கில் இருந்து விலகியுள்ளார். அதனால் வேறு ஒரு நீதிபதியை விரைவாக நியமிக்குமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்படும். கிருஷ்ணா-கோதாவி, காவிரி-பெண்ணாறு நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் கர்நாடகத்தின் பங்கு நீரை முடிவு செய்த பிறகே அதற்கு நாங்கள் ஒப்புதல் அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம். சம அளவில் நீர் பங்கீடு செய்ய வேண்டும் என்பது தான் கர்நாடகத்தின் நிலைப்பாடு.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story