ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர


ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர
x
தினத்தந்தி 19 March 2022 6:10 PM IST (Updated: 19 March 2022 6:10 PM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

குஜிலியம்பாறை:

கல்யாண நரசிங்க பெருமாள் கோவில்

குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருமண கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு பங்குனி மாத தேரோட்ட திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17-ந்தேதி திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.

தேரோட்டம்

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. அதையொட்டி கோவில் சன்னிதானத்தில் இருந்து எம்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது. பின்னர் காலை 8.35 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. 
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" கோஷம் எழுப்பியபடி வடம்பிடித்து தேரை இழுத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வீதி உலா வந்த தேர் காலை 9.35 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. இதில் கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் வி.கே.ஏ. சாமியப்பன், வி.கே.ஏ. கருப்பணன், செயல் அலுவலர் ஜெயசெல்வம், கோவில் மணியகாரர் சதாசிவம், அர்ச்சகர்கள் ராமகிருஷ்ணன், ராஜேஷ், ரமேஷ், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டம் நிகழ்ச்சியையொட்டி வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளை(திங்கட்கிழமை) மஞ்சள் நீராடல், பல்லக்கு அலங்காரம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. 



Next Story