மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்க நடவடிக்கை
மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ஊட்டி
மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
மாவட்ட குழு கூட்டம்
நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான குழு கூட்டம், ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்துவதோடு, முழு ஊதியம் வழங்க வேண்டும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு மற்றும் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்து தர திட்ட இயக்குனர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு முகாம்கள்
மருத்துவக் கல்லூரி டீன், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வருவாய்த்துறை மூலம் 18 வயதிற்குள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பினை தளர்த்தும் குழு மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட தொழில் மைய திட்டங்களின் கீழ் பயனடைய சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.
உதவி உபகரணங்கள்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங்கள் மற்றும் திருமண உதவித்தொகை தொடர்பான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story