வெங்கத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
சேதமடைந்த வெங்கத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
சேதமடைந்த வெங்கத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெங்கத்தான்குடி ஊராட்சி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே வெங்கத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது. இதில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். 6, 7, 8 ஆகிய மூன்று வகுப்புகள் ஒரு கட்டிடத்திலும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வரை ஒரு கட்டிடத்திலும் இயங்கி வந்தது.6, 7, 8 ஆகிய மூன்று வகுப்புகள் நடைபெற்ற கட்டிடம் முழுவதும் சேதமடைந்து செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் ஒரே கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம்வகுப்புகள் வரை நடைபெற்று வருகிறது.
எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலை
தற்போது இந்த கட்டிடமும் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் பெற்றோர்கள் உள்ளனர். மேலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை ஒரே கட்டிடத்தில் நடைபெறுவதால் பாடங்கள் புரிவதில்லை என்று மாணவர்கள் கூறுகின்றனர். இதனால் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அங்குள்ள கோவில் மரத்தடியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
புதிய கட்டிடம் வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த வெங்கத்தான் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் வசதி, கழிவறை வசதியை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story