மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பேனர்
சின்னமனூரில் மோட்டார் சைக்கிள் மீது பேனர் சரிந்து விழுந்தது. 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். கடந்த 16-ந்தேதி இவர், சின்னமனூர் சந்தைத்தெரு வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள கோவில் முன்பு வைத்திருந்த பேனர் ஒன்று, திடீரென மோட்டார் சைக்கிளில் சென்ற கார்த்திகேயன் மீது விழுந்தது. அந்த பேனருக்குள் கார்த்திகேயனின் தலை சிக்கி கொண்டது.
சிறிது தூரம் பேனருடன் சென்ற அவர், சாதுரியமாக செயல்பட்டு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். இதனால் காயம் இன்றி அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த காட்சி, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கார்த்திகேயன் மீது பேனர் விழுவதற்கு முன்பு, அந்த வழியாக நடந்து சென்ற வாலிபர் மீதும் பேனர் சரிந்து விழுந்துள்ளது. அதுவும் கேமராவில் பதிவாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேனர் சரிந்து விழுந்து 2 பேர் உயிர் தப்பிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேசான காற்றுக்கே, தாக்குப்பிடிக்காமல் எளிதில் சரிந்து விழும் வகையில் அந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது ெதரியவந்தது.
எந்தவித அனுமதியும் இன்றி திருமண நிகழ்ச்சிக்காக, பேனர் வைத்த நபர்கள் மீது போலீசார் மற்றும் சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story