திண்டிவனத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஜப்தி
ரூ.16 லட்சம் வரி செலுத்தாததால் திண்டிவனத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரெயில் நிலையம் அருகில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த 9 ஆண்டுகளாக திண்டிவனம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, செல்போன் கோபுரம் வைத்ததற்கான வரியை கட்டவில்லை. இவ்வாறாக ரூ.15 லட்சத்து 94 ஆயிரத்து 436 வரி பாக்கி இருக்கிறது.
இந்த வரியை செலுத்துமாறு நகராட்சி அலுவலகத்தில் இருந்து நோட்டீசு அனுப்பியும், தண்டோரா மூலம் தெரிவித்தும் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருந்து வரி கட்டவில்லை.
பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஜப்தி
இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று மதியம் 12.30 மணிக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை ஜப்தி செய்தனர். அதாவது அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நகராட்சி வாகனத்தில் ஏற்றினர். அப்போது நகராட்சி அலுவலர்களுக்கும், பி.எஸ்.என்.எல். அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் ஜப்தி செய்த பொருட்களை நகராட்சி அதிகாரிகள், வாகனத்தில் ஏற்றி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அடிப்படை வசதிகள் செய்ய...
இது குறித்து நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை உடனடியாக செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வரி செலுத்தாததால் நகரின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story