விசலூர் விசலிக்கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
விசலூர் விசலிக்கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆவூர்:
விசலிக்கோவில்
குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே விசலூரில், விசலிக்கோவில் உள்ளது. இங்கு விநாயகர், மார்க்கபுரீஸ்வரர், சிவகாமசுந்தரி அம்மன், சுப்பிரமணியசாமி ஆகிய சுவாமிகள் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டின் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவில் கோவிலை சுற்றி சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக கடந்த 17-ந் தேதி மாலை சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை மார்க்கபுரீஸ்வரர் மற்றும் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரோட்டம்
தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சுப்பிரமணியசாமிக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர். பெண்கள் தங்களது குழந்தைகளை கரும்பு தொட்டிலில் படுக்க வைத்து கோவிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று காலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களில் விநாயகர், மார்க்கபுரீஸ்வரர், சுப்பிரமணியசாமி ஆகியோர் எழுந்தருள செய்தனர். பின்னர் வாணவேடிக்கை முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்கள் கோவிலை சுற்றி வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் தேர்களின் முன்பு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
விடையாற்றி நிகழ்ச்சி
இதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் காப்பு அவிழ்த்தல், கொடியிறக்கம் மற்றும் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசலூர், புலியூர், திருச்சி, துவாக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வீசங்க நாட்டை சேர்ந்த 32 கிராம மக்கள் செய்திருந்தனர். கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story