பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை


பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 20 March 2022 1:08 AM IST (Updated: 20 March 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர், 
பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். 
அரசின் திட்டங்கள் 
விருதுநகரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
 தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு மாவட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு திட்டங்கள் எதுவானாலும் சரி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது. இதற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெறும் கோஷமாகவே இருக்கும். ஆகவே அதற்கு சாத்தியமில்லை. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 37 ஆண்டுகளாக செயல்பாட்டிலிருந்த தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் பற்றி பாராளுமன்றத்தில் கேட்டபோது மத்திய மந்திரி உபேந்திரயாதவ் இது பற்றிய புள்ளிவிவரங்கள் இல்லை என்றும் இதனை கல்வித்துறையுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த நிலையில் உடனடியாக இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
எனவே இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த கோரி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். பட்டாசு தொழிலை பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 
கண்காணிப்புக்குழு கூட்டம்
 முன்னதாக விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் குமார், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம்  மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 இக்கூட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு இலவச பட்டா வழங்கி அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்பி வலியுறுத்தினார். இதற்காக 450 பேருக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து நிலுவையில் உள்ள திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. அறிவுறுத்தினார்.
ஆசிரியர்கள் மனு
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி.யை சந்தித்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்த கோரி மனு கொடுத்தனர். அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார்.

Next Story