பெண் கொலை வழக்கில் 5 பேர் கைது


பெண் கொலை வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 20 March 2022 1:29 AM IST (Updated: 20 March 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை அருகே பெண் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். நிலப்பிரச்சினையில் அவரை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நெல்லை:
பாளையங்கோட்டை அருகே பெண் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். நிலப்பிரச்சினையில் அவரை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெண் படுகொலை
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்தவர் மாதா (வயது 55). இவர் கடந்த 15-ந்தேதி அங்குள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் கொலை செய்து, கால்களை துணியால் கட்டி முட்புதருக்குள் வீசிச்சென்று விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவுப்படி ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெபராஜ் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், மாதாவின் குடும்பதினருக்கும், அவரது உறவினரான மணற்காடை சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை இருந்துள்ளது எனவும், இடத்தை எழுதி கொடுப்பதற்கு மாதா இடையூறு செய்துவந்துள்ளார். இதையொட்டி மாதாவை உறவினர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

5 பேர் கைது
இந்த கொலை சம்பவத்தில் மணற்காடு கிராமத்தை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் இசக்கிமுத்து (31), மாரிமுத்து மகன் முத்துஇசக்கி (23), கணபதி மகன் சண்முக சுந்தரம் என்ற சுந்தர் (36), கண்ணசாமி மகன் அடைக்கலம் (38) மற்றும் அடைக்கலம் மகன் கண்ணன் (40) ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நிலத்தை எழுதி வாங்குவதற்கு இடையூறாக இருந்ததால், மாதாவை கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Next Story