கோடைகாலம் முடியும் வரை காட்டுப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்


கோடைகாலம் முடியும் வரை காட்டுப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 20 March 2022 1:33 AM IST (Updated: 20 March 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மாவட்டத்தில் கோடை காலம் முடியும் வரை காட்டு பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வனத்துறையினருக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

சேலம்:-
தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மாவட்டத்தில் கோடை காலம் முடியும் வரை காட்டு பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வனத்துறையினருக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்
கோடை காலத்தில் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் கவுதம் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசும் போது கூறியதாவது:-
கோடைகாலம் தொடங்கி உள்ளதால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க ஏற்காடு, கருமந்துறை மலைப்பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக வனப்பகுதி அருகில் வசிக்கும் உள்ளூர் மக்கள், ஊர் தலைவர்கள் ஆகியோருடன் சேர்ந்து தீயணைப்புத்துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
கண்காணிப்பு பணி
வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் காய்ந்த சருகுகளை எரிக்கக்கூடாது. கால்நடை மேய்ச்சலுக்காக வனப்பகுதியில் செல்பவர்கள் தீப்பற்ற வைக்காமல் இருக்க வேண்டும். வனப்பகுதியில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீ தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். கோடை காலம் முடியும் வரை வனப்பகுதியில் வனத்துறையினர் தொடர் ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
காட்டுத்தீ ஏற்பட நேர்ந்தால் பொதுமக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி அவர்களை உரிய நிவாரண மையங்களில் தங்க வைக்கவும், உணவு பொருட்களுக்கான ஏற்பாடு செய்து கொடுக்கவும் தயார் நிலையில் இருக்க வேண்டும். காட்டுத்தீ தொடர்பான தகவல்களை உடனடியாக 101 என்ற எண்ணுக்கும், கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணம் இல்லாத 1077 என்ற எண்ணுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார். கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் விஷ்ணுவர்த்தினி, சரண்யா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story