நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ரூ.9¾ லட்சத்தில் 35 கண்காணிப்பு கேமராக்கள்
நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ரூ.9.71 லட்சத்தில் 35 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ரூ.9.71 லட்சத்தில் 35 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தொடங்கி வைத்தார்.
கண்காணிப்பு கேமராக்கள்
நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக ரூ.9.71 லட்சம் மதிப்பில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு உள்ளது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேமித்து வைப்பதற்கான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காணிப்பு கேமரா செயல்பாட்டுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் புதிய கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தமிழகத்திலேயே முதல் முறையாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் 35 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆயுதப்படை மைதானத்தின் முன் உள்ள சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
இதை முன்னுதாரணமாக கொண்டு பொதுமக்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அப்போது குற்றங்கள் குறையும்.
வழிப்பறி கும்பலை பிடிக்க நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் தற்போது 5,342 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்த கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறோம்.
குமரி மாவட்டத்தில் வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கொள்ளையர்கள் தான் கைவரிசை காட்டி விட்டு தப்பி சென்று விடுகிறார்கள். அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.
கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனையை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு மட்டும் 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 348 பேர் கைது செய்யப்பட்டனர். 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா புழக்கங்கள் இருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாக தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தனி ஆயுதப்படை மைதானம்
குமரி மேற்கு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களை உள்ளடக்கி தனி ஆயுதப்படை மைதானம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) விவேகானந்தா சுக்லா, கூடுதல் சூப்பிரண்டுகள் சுந்தரம், வேல்முருகன், துணை சூப்பிரண்டுகள், நவீன்குமார், கல்யாண குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story