போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி சென்னையில் கைது


போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி சென்னையில் கைது
x
தினத்தந்தி 20 March 2022 2:08 AM IST (Updated: 20 March 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் சென்னையில் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தஞ்சை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

தஞ்சாவூர்;
போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் சென்னையில் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தஞ்சை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்
தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையை சேர்ந்தவர் ராஜாராமன் என்கிற சூரக்கோட்டை ராஜா (வயது52). இவர் மீது கொலை, கொலைமுயற்சி, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தஞ்சை தாலுகா, மருத்துவக்கல்லூரி, தெற்கு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது.
இதனால் ராஜாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ராஜா வெளிமாநிலங்களுக்கு சென்றார். அவர், மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலைமறைவாகி, அவ்வப்போது இடத்தை மாற்றி கொண்டே இருந்தார். இந்தநிலையில் சென்னை டி.பி.சத்திரத்தில் நடந்த சேவல் சண்டையை பார்க்க ராஜா வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கைது
உடனே தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், ஏட்டுகள் உமாசங்கர், ராஜேஷ், போலீஸ்காரர்கள் அருண்மொழி, நவீன், அழகுசுந்தரம், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சென்னைக்கு சென்று ராஜாவை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story